Published Date: March 8, 2023
CATEGORY: CONSTITUENCY
"சமூக வளர்ச்சியிலும், கல்வியிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. மகளிருக்கு சம உரிமை கொடுக்கக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட்டது, அதற்கு முன்னோடியாக தமிழகம் இருந்தது. அதற்கான பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்."
இந்தியா முழுவதுமாக உற்பத்தித் தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் 42 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தமிழக நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் சென்னை மகளிர் பிரிவு சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கூட்டமைப்பின் சென்னை கிளைத் தலைவர் பிரசன்னா வசநாடு தலைமை வகித்தார். இந்த விழாவில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 8 பெண்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "சமத்துவம் மிக்க வருங்காலத்தை உருவாக்கிடப் பெண்களின் எழுச்சி இன்றியமையாதது. புத்துலகம் படைத்திட இயங்கிவரும் தமிழக, இந்திய பெண்களுக்கு எனது உலக மகளிர்தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
சமூக வளர்ச்சியிலும், கல்வியிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. மகளிருக்கு சம உரிமை கொடுக்கக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட்டது, அதற்கு முன்னோடியாக தமிழகம் இருந்தது. அதற்கான பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்று இந்தியா முழுவதும் உற்பத்தி நடைபெற்றுவரும் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பெண்கள் தொழில்துறையில் முன்னேறி இருப்பது அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது.
என்னுடைய கல்வியிலும், வாழ்க்கையிலும் பெண்களின் வழிகாட்டுதல் என்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. எனது தந்தை நடத்தி வந்த நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அந்த பெண்கள் கொடுத்த பயிற்சியால் தான் முடிந்தது.
நம் அனைவரின் வாழ்க்கையிலும் மகளிரின் பங்களிப்பு முக்கியமானது, விலைமதிப்பற்றது. சாதனையாளர்கள் அதிகமாக இருந்தால்தான் சமூகம் பொருளாதாரம், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் அடையும்” என்றார்.
Media: vikatan.com